வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஒரு குவளைத் தண்ணீர் : சிறுகதை : தர்சித் ராகுல்

 

ஐயா! ஐயா!.......”

சுப்பிரமணி காத்துக்கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வருவதாய்ச் சொல்லி உள்ளே சென்றப் பெரியவரை இன்னும் காணவில்லை….. காரணம் என்னவாயிருக்கும்……

சுப்பிரமணி…. அவங்க உனக்கு தண்ணீ தரமாட்டாங்கப்பா…..”

 

என் அன்பிற்கினிய உடன்பிறப்புகளே!

அவன் தண்ணீர் தரமாட்டான் …….. சிரசிலிருந்து உதித்தவன் எப்படி காலிலிருந்து உதித்தவனுக்கு தண்ணீர் கொடுப்பான்…….

அதனால்தான் சொல்கிறோம் சமத்துவம் வெற்றி பெற நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம்…..”

இடையில் ஒரு குரல் ஏதோ உளறியது.

இராகு காலம் பதினொன்னுப்பத்துக்கு …….

நடராஜ சாஸ்திரி கணிச்சது………

அதுக்குள்ள முடிக்கனும்…..”

ஆக……. எல்லோரும் வாக்களிக்க வேண்டும்

நன்றி ………  நன்றி……….”

வாய் கிழிய பேசியவர் நா வறண்டுப்போனார்.

டேய்! அந்தத் தண்ணிப்போத்தல யெடு!  எழவு….. ஒரு இருநூறு ரூவாய்க்கு எவ்வளவுப்பொய்யச்சொல்லிட்டு திரிய வேண்டியதாயிருக்கு’’


ஒரு முன்னணி நடிகர் தான் நடத்துற நிகழ்ச்சியில தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஒரு மீட்டர பொருத்துரதாக சொல்ராரு…….

அந்த நிகழ்ச்சியோட ஸ்பான்சர்ல ஒருத்தன் யாருன்னு பாத்தா இந்த நிலத்தடி தண்ணியப் பூரா உறிஞ்சிட்டுப்போய் தன்னோட சோழியப்பாக்குற ஒரு பெரிய மனுசன் இந்தக்கருமத்த எல்லாம் எடுக்கிறது யாருன்னு பாத்தா கருப்பு சட்டைக்கும் பூணூலுக்கும் மாறி மாறி ஊதுற ப்ராடுக்காரப்பயலுக………..

இதப்பாக்குறதுக்கு தன்னோட வேல வெட்டியெல்லாம் மறந்து ஒரு ஆட்டுமந்தை மாதிரியானத் தரங்கெட்ட சனம் …… கொடுக்கப்படுறத திண்ணுட்டு…….

காட்டப்படுறத பார்த்துட்டு ……..

மூடிக்கிட்டுப்படுக்குற ஒரு கூட்டம்…….

அந்த ஆட்டுத்தலைக்கடவுள் வணங்கிகளின் மொழியில் இவர்களுக்கான பெயர் கோயிம்கள் …….

அந்தக் கோயிம்கள் வேறு யாருமில்ல நானும் நீங்களுந்தான்

 

நீயும் நானும் நினைச்சதுமே நாமல்லாம் ஏங்கிட்டுக் கெடக்குற அந்த மாற்றம் வந்துரும்னு நம்புற………

வாய்ப்பேயில்ல………

அதெல்லாம் எந்தக் காலத்திலயும் நடக்காது ……..

ஏன்னுத் தெரியுமா?

அது யாருக்கும் தெரியாது………

அதான் அரசியல்

 

எது அரசியல்?

கொள்ளையடித்துவிட்டு வெளியூர் சென்று விடுவோருக்கும்,

இரத்தக்கறை படிந்த துண்டுகளுக்கும் மாறி....மாறி....சேவகம் செய்வதன் பெயரா அரசியல் ……

அது ஒரு சாக்கடையா… ……..

பரவாயில்லை,

தூர் வாரி சாக்கடை நீரை தெளிய வைக்க வேண்டும் என  எண்ணுவாயானால்

நீயும் நம்மவனே

போத்தலில் அடைக்கப்பட்ட சுத்தமானக் குடிநீரைக் கொஞ்சமாய்த் தொண்டைக்குழிக்குள் இறக்கிக்காய்ந்த வேர்களுக்கு நீர்ப்பாய்ச்சியவர் தனது வலக்கையைத் தூக்கி வானுக்கு உயர்த்தினார்.

அவையெங்கிலும் இருந்து ஆர்ப்பரித்திட்டக் கரவொலிகள் அடைமழையின் போதான மழைத்துளிகளாய் மண்ணிலே வீழ்ந்து கீதம் பாடிற்று.

 

இல்லயில்ல………

நீ பாடிட்டு இருக்கறப்போ இடையில ரெண்டு மூணு இடத்தில ஸ்ருதியா ஆங்……. அதான் அது பிழைச்சுடிச்சி…….

சோ……..

நீங்க ……… நீங்க ……..”

இடையில் திடீரென புகுந்துக் கொண்டார் ஒருவர்

ஒரு சிறியஇடைவெளிக்குப் பிறகு ……………”

இதப்பாருமா….  மேடம் நீங்கன்னு ரெண்டாவது தரம் சொல்ரதுக்கு முன்னமே அழ ஆரம்பிச்சரனும் சரியா

சரிங்க சார்

 

சார்! சார்!”

எந்தப் பதிலும் இல்லை

ஐயா! ஐயா!

கதவு திறக்கப்பட்டது.

வாயா சுப்பிரமணி என்ன விசயம்

தலைய சுத்துதுங்க ஐயாகொஞ்சம் தண்ணீ

இரு…. வர்றேன்….”

சில நிமிடங்கள் சுருண்டு வீழ்ந்தன…..

ஆனால் சுப்பிரமணி விழவில்லை…..

மீண்டும் ஒரு முறை அழைத்துப் பார்த்தான் ,

ஐயா!  ஐயா! “

எதிரே யாரோ ஒருவர் பன்றி உருவம் பொறித்த மேற்சட்டையோடு வந்துக்கொண்டிருந்தார்.

அருகிலேயே வந்து விட்டார்.

அவுங்க ஒனக்கு தண்ணீர் தரமாட்டாங்கப்பா ஏன்னா….”

சுப்பிரமணி சுருண்டு விட்டான்.

வெளியே வந்த அந்த ஐயா பன்றி படம் பொதித்த சட்டை அணிந்தவரைக் கண்டதும் குஷியாகிப் போனார்.

நேத்து உங்காளு ஒருத்தன் கிட்ட டயம் குறிச்சுக் கொடுத்தனே கெடச்சதா ராமசாமி

அதெல்லாம் கெடச்சது நடராஜ சாஸ்திரி….

சரி இப்பத்தான் வெளியாள் யாருமில்லயே நாம ஏன் தமிழ்ல பேசிட்டு இருக்கோம்

அட…. உள்ள வா ராமசாமி காப்பி சாப்பிட்டுண்டே மாட்லாடுவோம்

இருவரும் வீட்டுக்கு மாற,

பேசிய மொழி மாற,

சுப்பிரமணி மட்டும் மாறாது மண்ணில் வீழ்ந்துக்கிடந்தான்.

அவன் மயங்கியதற்கானக் காரணம் ஒரு குவளைத் தண்ணீர்க் கிடைக்காததனால் அல்ல……..

பல குவளைகளில் தண்ணீர் அளவுக்கதிகமாய் கிடைத்ததால்……

                                            முற்றும் 

சிறுகதை மஞ்சரி எனும் மாதாந்த சஞ்சிகை இதழில் வெளியாகிய சிறுகதை. 


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடல் பசி : சிறுகதை : ராஜேந்திரன் ஜீத் ஹம்ஷன்

  செந்தில்  மற்றும்   கணேசன்   இருவரும்   படகில்   கடலின்   நடு   பகுதி   வரை   செல்கின்றனர் . " எல்லா   சரியா   இருக்குல "  என்று...