இரண்டு நாடுகள் போர் புரிகின்றன என்ற
செய்தியைக் கேட்டதும் அருகிலுள்ள வளர்முக நாடுகளுக்கு திக்..திக்.. என்று
இருக்கும். ஆயுத வியாபாரம் மேற்கொள்ளும்
நாடுகளுக்கோ தமது ஆதிக்கத்தை பரப்புவதற்கு உருவான வாய்ப்பு என்ற இன்பம் நிச்சயமாய்
இருக்கும். இவர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு அல்லலுறும் ஏதுமறியாச்
சனங்களுக்கோ யுத்தம் அச்சத்தின் உச்சத்தை நித்தம் தரும். உரிமைகளை மீட்பதற்காகவன்றி
நாடுகளை ஆக்கிரமிக்கும் வேட்கையினால் ஆரம்பமாகியிருந்த யுத்தத்தின் உச்சக்கட்ட
நாள் அதுவாகும்..
‘’மேஜர் ஜெனரல்! நாட்டின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்கள்
நடைபெறும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன’’ என்றான் படைப் பிரிவுகளின் துணைக் கட்டளையிடும் அதிகாரி.
ஜெனரல் கலவரமடையவில்லை.
‘’ம்.. ராடாரின் உதவியுடன் அதனைச் சுட்டு வீழ்த்துவதற்கு ஒற்றைப் படைவீரன் போதும்’’ எனக் கூறிவிட்டுச் சிரித்தார். இதற்கிடையில் குறித்த நாட்டின் ஊடகங்களுக்கு இத்தகவல் கசிந்திருந்தது.
‘’பொதுமக்களுடைய நலன் கருதியும் சர்வதேச சமாதானப் பேரவையின் கட்டளையை மதித்துமே
மார்ச் மாத இறுதிவரை நாம் தற்காலிக யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம்.
மீண்டும் அவர்கள் எம்மைச் சீண்டும் பட்சத்தில் எமது நகர்வுகள் பாரிய அழிவுகளை
ஏற்படுத்தாமல் விடாது என நினைவுட்டிக் கொள்ள விரும்புகின்றேன்..’’ என்றார் அந்நாட்டின்
பாதுகாப்பு அமைச்சர்.
சுமார் இருமாதக்காலமாய் முடிவின்றித் தொடர்கின்ற இந்த யுத்தத்தில் குளிரூட்டப்பட்ட
அறைகளில் காலுக்கு மேல்கால் போட்டுக் கொண்டு கட்டளையிடும் இவர்களை போன்றவர்களில்
ஒருவர் கூட மடியவில்லையே என்பதுதான் எனக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.
‘’அவர்கள் எமக்கு நாசத்தை ஏற்படுத்துவார்களாயின் நாம் எத்தனை மோசமானவர்கள்
என்பதை அவர்களுக்குப் புலப்படுத்துவோம்.’’என ஆவேசத்தில் கொந்தளித்தார் மற்றைய நாட்டின் ஒரு
பிரபல அரசியல்வாதி.
‘’ஜெனரல், வரலாற்றில் இன்றைய தினம் நடக்கப் போகும் விடயத்தை உலக மக்கள் யாரும்
மறக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த நாட்டின் படைத்தளபதிக்கும்
மற்றுமொருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதை நம் நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.’’ என வார்த்தைகளை மென்று
விழுங்கினார் கட்டளையிடும் அதிகாரி.
நீண்ட நேரம் நிலவிய மௌனத்தை உடைத்துக் கொண்டு ஜெனரலின்
குரல் வெளிப்பட்டது. ‘’எல்லோரையும் தயார் நிலையில்
இருக்கச் சொல்லுங்கள்.. ஆனால் என் கட்டளையின்றி எதனையும் செய்து விபரீதம்
ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்து வையுங்கள்’’ இம்முறையும் ஜெனரல்
கலவரமடையவில்லை.
ஜெனரலின் கட்டளையை இராணுவ வீரர்களுக்குத் தெரிவித்தார்
கட்டளையிடும் அதிகாரி.
கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து ஒரு கட்டத்தில்
நிலவின் ஆக்கிரமிப்புக்குட்படுத்தப்பட்டுப் போயிருந்தது வானம்.
‘’ம்... சொல்லுங்கள்...’’ என்கிறார் ஜெனரல்.
‘’எமது நாட்டின் வடக்கு எல்லையை நோக்கி.. அதாவது இப்போது நீங்கள் இருக்கும்
இடத்தை நோக்கி விமானமொன்று அனுமதியின்றி வரும்.
உடனடியாக அதைச் சுட்டு வீழ்த்தக்
கட்டளையிடுங்கள்.’’
‘’எத்தனை நிமிடங்களுக்குள் எனச் சரியாக சொல்ல முடியுமா?’’
‘’அதன் வேகத்தின் படி பார்த்தால்
எப்படியும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் அது எல்லைக்குள் நுழைந்துவிடும்.’’
அத்துடன் தொடர்பு துண்டிக்கப்படுகின்றது.
உடனடியாக கட்டளையிடும் அதிகாரி வரவழைக்கப்படுகின்றார்.
‘’இன்று இரவு பன்னிரண்டு மணிக்குள் அந்த விமானம் வருவதாக மேலிடம் உறுதி செய்து
விட்டது. ஆனால்.. வெறும் ஒரு விமானத்தை வைத்து என்ன செய்ய எதிர்பார்க்கிறார்களாயிருக்கும்..?’’ என தனக்குத் தானே கேள்வியையும்
கேட்டுக்கொண்டு விடை தெரியாமல் தவித்தார் ஜெனரல். பின்பு அவரே மீண்டும் பேசத்
தொடங்கினார்.
‘’எது எப்படியோ எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானத்தை உடனடியாகச் சுட்டு
வீழ்த்தச் சொல்லுங்கள்.’’
கட்டளையிடும் அதிகாரியும் அவ்வாறே செய்யும்படி
அறிவிப்பதாய் கண்களால் சமிக்ஞை செய்தார். எலும்புத்துதுண்டுக்காக ஏங்கும் தெரு
நாய்களாய் மேலிடத்தின் கட்டளைக்காகக் காத்துக் கிடக்கும் இராணுவத்தினருக்குத் தமது
அதிகாரியின் அறிவிப்பு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும்.
போர்த்திக் கொண்டு தூங்க வேண்டிய நேரத்தில்
வானத்தையே பார்த்துக் கொண்டு கிடந்தார்கள் அத்தனைப் பேரும்...
‘’ஒரு விமானம் தானே வரப் போகிறது.? ஏன் இத்தனை பேர் ?’’ ஏன மெதுவாக பேச்சை
ஆரம்பித்தான் ஒரு சிப்பாய்.
‘’அதுதானே....? ‘’ எனக் கேள்வியை கேட்டவனின் சந்தேகம் எனும் தீயில் எண்ணெய் ஊற்றினான்
இன்னொருவன்.
‘’யாருக்குத் தெரியும், வரப்போவது ஒரு விமானம் மட்டும் தானென்று....’’ என்றான் மற்றொரு சிப்பாய்.
‘’ ஏன் .. அது தான் அதிகாரி அறிவித்தாரே..’’ என இன்னொரு இராணுவ வீரன்
கூறினான்.
இப்படியாக இவர்களுக்கு இடையிலான உரையாடல் நீண்டு
கொண்டே போக ஜெனரலின் சத்தம் அவற்றுக்கு முற்று புள்ளி வைத்தது.
‘’ஜெனரல்...ஜெனரல்...’’ எனக் கதறினார் கட்டளையிடும் அதிகாரி ஜெனரலின் உடல் மரக்கட்டையைப்
போலாகியிருந்தது.
‘’யாரும் பதட்டமடைய வேண்டாம்..!’’
நாட்டைக் காக்கும் பொறுப்பு உங்கள் கைகளில்...இன்னும்
சில நிமிடங்களில் வரப்போகும் விமானம் மட்டுமே நம் இலக்கு....அதுவே,ஜெனரலுக்கான உங்களின்
இறுதி மரியாதை.’’ என்று கட்டளையிட்டார் அதிகாரி.
ஜெனரலின் இழப்பு படையினருக்கு பெரும் பின்னடைவுதான்...என்றாலும்
அதைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் படைவீரர்கள் அப்போது இருக்கவில்லை. இவ்வாறாக,ஜெனரலின்
உயிர் காற்றோடு காற்றாகக் கலந்து கரைந்துப்
போயிருந்தது.
‘’இன்னும் நூற்றி இருபது செக்கன்கள்’’ ஆட்டத்தின் இறுதிக் கட்டம் ஆரம்பமானது. செக்கன்கள்
ஒவ்வொன்றாகச் செத்து மடியும் போதும் படையினரின் உள்ளக் கொதிப்பு கூடிக்கொண்டே
போனது.
இன்னும் ஐந்தே வினாடிகள்...
ஆம்...
பின்னணி இசை இல்லாதிருந்த போதும் கிட்டத்தட்ட
ஒரு முன்னணி நாயகனின் திரைப்பட நுழைவைப் போலிருந்தது விமானத்தின் வருகை. ஆனால்..
அதை விமானமென்று சொல்லிவிட்டால் விமானங்கள் எல்லாம் சேர்ந்து என்னை நீதிமன்றக்
கூண்டில் நிறுத்தி வைத்துவிடும். எனவே அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக
வருந்துகின்றேன்.
அது விமானம் இல்லையென்றால்,
‘’இதுதான் அணுகுண்டாயிருக்குமோ..’’என்னவாயிருந்தால் நமக்கென்ன என நினைத்த இராணுவ வீரர்கள்
சரமாரியாக சுட்டுத் தள்ளினார்கள். அந்தப் பறக்கும் வாகனம் வெடித்துச் சிதறியிருக்க
வேண்டும். ஆனால் அது அப்படிச் செய்யவில்லை திடீரெனக் காற்றில் கந்தகவாசனையும்
வேறேதோ தாங்க முடியாத வாசனையும் வீசியது. இப்போது அந்தப் பறக்கும் வாகனம் வாணவேடிக்கையாக
மாறி ‘’பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ எனச் சில விநாடிகள் வானை வண்ணமயமாக்கிவிட்டுக் காணாமல் போனது. படைவீரர்களுக்கு அந்த விசவாயு
எரிச்சலை ஏற்படுத்திட ஒவ்வொருவரும் ‘’தொப்..தொப்..’’ என வீழ்ந்தார்கள். அந்த மாதத்தின் முதல் நாளிலேயே
இப்படியொரு பின்னடைவு ஏற்படும் என அவர்கள் எண்ணியிருக்க வாய்ப்பேயில்லை. மாதத்தின்
முதல் நாள் என்பது சரி..என்ன மாதமாயிருக்கக் கூடும் என்ற வினா எழவேயில்லையா.....?
அது ‘’ஏப்ரல் மாதம்..’’
முற்றும்
(இந்த சிறுகதையானது சிறுகதை மஞ்சரி எனும் மாதாந்த சஞ்சிகையில் ‘’இதழ் 12’’ ஏலவே வெளிவந்தது ஆகும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக